புது டெல்லி, மார்ச் 23 – விமானப் போக்குவரத்து துறையில் இந்தியாவின் புதிய சட்டம், பொருளாதார இடையூறுகளையும், குறைந்த வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஏர் ஏசியா நான்காவது விமானத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்த டோனி பெர்னாண்டஸ், அனைத்துலக விமான போக்குவரத்து தொடர்பாக இந்தியா கொண்டு வந்துள்ள 5/20 சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,”உள்நாட்டு விமான போக்குவரத்துகளை செய்து வரும் விமான நிறுவனங்கள், அனைத்துலக விமான போக்குவரத்திற்கு முன்னேற வேண்டுமானால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவமும், 20 விமானங்களையும் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய அரசு சட்டம் நிறைவேற்றி உள்ளது.”
“இது போன்ற சட்டங்களை நான் வேறு எந்தவொரு நாடுகளிலும் பார்த்ததில்லை. இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போதய நிலையில் இந்தியாவிற்கு அதிக அளவிலான முதலீடுகளும், அதிக அளவிலான உலக இணைப்புகளும் தேவை. இத்தகைய சட்டங்களால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. இந்திய அரசு இந்த விவகாரத்தில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும். மேலும், தொழில்முனைவோருக்கு இது போன்ற இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை விமான போக்குவரத்தை அதிகப் படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதன் மூலம் இந்தியாவிற்கான சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிக்கலாம். விமான போக்குவரத்து துறை செழிக்க வேண்டும் என்றால், அரசின் ஒத்துழைப்பு இன்றி அமையாதது. அதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.