ஈடன், மார்ச் 24 – நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்துள்ளது.
உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் மைதானத்தில் நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.
அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா 14 பந்துகளை சந்தித்த நிலையில் 10 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் 14 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸிஸ் மற்றும் ரோஸ்ஸோவ் இருவரும் இணைந்து அணியை வீழ்ச்சியிலிருந்து தடுத்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ரோஸ்ஸோவ் 39 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கியதும் ஆட்டத்தில் அணல் பறந்தது. அவர் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார். இதனால் அவர் 32 பந்துகளில் [7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] அரைச்சதத்தை கடந்தார்.
இந்நிலையில் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டதோடு, ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் டு பிளஸ்ஸிஸ் 82 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிக்கும் விரட்டி அதிரடியாக ஆடினார்.
18 பந்துகளை மட்டுமே சந்தித்த டேவிட் மில்லர் 49 ரன்களில் அவுட்டானார். 43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 65 ரன்களுடனும், டுமினி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (21) கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.