புதுடெல்லி, மார்ச் 24 – பிரபல இந்தி நடிகர் சசி கபூர் (77), 2014-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்திய திரைப்படத் துறைக்கு மிகச் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது இது.
தங்கத் தாமரை விருது, ரூ.10 லட்சம் மற்றும் சான்றிதழ் அடங்கியது இந்த விருது. இந்த விருதைப் பெறும் 46-வது திரைப் பிரபலமான சசிகபூர், தீவார், சத்யம் சிவம் சுந்தரம், திரிசூல், கபி கபி போன்ற மிகப் பெரிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராஜ்கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்ற பெருமை கிடைக்கிறது. ராஜ்கபூர், பிரிதிவிராஜ் கபூர் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
தற்போது அந்தப் பட்டியலில் சசி கபூர் இணைகிறார். இந்த மூவரும் பத்மபூஷண் விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் மிகப் பெரிய நட்சத்திர குடும்ப மான கபூர் குடும் பத்தைச் சேர்ந்த சசி கபூர், 1938-ல் பிறந்தார்.
1940-ல் தனது 2-வது வயதில் நடிக்க வந்தார். 100-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். பல்வேறு இந்திப் படங்களையும் தயாரித்துள்ளார். மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.