Home நாடு பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு – மார்ச் 30-ம் தேதி லண்டனில் நடைபெறுகிறது!

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு – மார்ச் 30-ம் தேதி லண்டனில் நடைபெறுகிறது!

649
0
SHARE
Ad

waythaகோலாலம்பூர், மார்ச் 25 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்த வழக்கு வரும் மார்ச் 30-ம் தேதி லண்டன் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி லண்டனில் இருந்து தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அதன் தேசிய ஆலோசகர் என்.கணேசன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் மலாயாவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் வழித்தோன்றலினர் சார்பாக ஐக்கிய ராஜியத்திற்கு(UK) எதிராக ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தின் சார்பில் கடந்த 2-07-2012இல் இங்கிலாந்து வேல்ஸ் உயர்நீதி மன்றத்தில் இன நல வழக்கு மறுசார்வு செய்யப்பப்பட்டது.”

#TamilSchoolmychoice

“சமூக-பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மலேசிய இந்தியத் தொழிலாளர்களுக்கு பிரிட்டிஷ் அரசின் கடப்பாடு குறித்து இந்த வழக்கில் வினா தொடுக்கப்பட்டுள்ளது.”

“இந்த வழக்கு, வரும் 30-03-2015-ஆம் நாள் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக விசாரணைக்கு வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல் முதலில் 2007, ஆகஸ்ட் 30-இல் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்பில் தான் 2007 நவம்பர் 25-இல் ஹிண்ட்ராஃப் பேரணி இடம்பெற்றது என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.”

“முதலில் தொடரப்பட்ட வழக்கு, எதிர்பாராமல் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்ததால், அதைத் தொடர முடியாமல் போனது. இருந்தபோதும், பாதிக்கப்பட்ட நம் சமுதாயத்தினர் அதற்கான நியாயத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதில் ஹிண்ட்ராஃப் விடாப்பிடியாக இருந்து, தற்பொழுது அந்த கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது வழக்கை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஹிண்ட்ராஃப், அதற்குப் பின்னும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலதரப்பட்ட தடைகளைச் சந்தித்து வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளித்தபின் தற்பொழுது விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது.”

இந்த வழக்கில் ஹிண்ட்ராஃப்-இன் கோரிக்கைகள்: 

அ) மலாயா இந்தியர்களின் அர்ப்பணிப்பை பிரிட்டிஷ் அரசு உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. 

ஆ) நாடு விடுதலை அடைந்த பின் இந்த மலாயா மண்ணிலேயேத் தங்கிவிட்ட இந்தியப் பாட்டாளிகளின் உரிமையையும் அபிலாஷைகளையும் அலட்சியம் செய்தது. 

இ) இந்த மண்ணை விட்டு வெளியேறியபோது, மலாயா அரசியல் சாசனப்படி இந்திய சமுதாயத்திற்கு உரிய முன்னுரிமையை பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப வரையறுக்கத் தவறியது. 

ஈ) ரெய்ட்(REID) அரசியல் அமைப்புக் குழுவிடம் முக்கியமான பரிந்துரைகளை முன் வைக்கத் தவறியது .

உ) அம்னோ தலைமையிலான கூட்டரசும் மலாய் ஆட்சியாளர்களும் தங்களுக்குள்ள சிறப்பு உரிமையின் மூலம் தங்களுக்கு சாதகமாக முன்வைத்த பரிந்துரைகள் குறித்து ரெய்ட் அரசியல் அமைப்புக் குழு நடு நிலையாக நடந்து கொள்ளவில்லை.

ஊ) ரெய்ட் அரசியல் அமைப்புக் குழுவின் முன் அம்னோ தலைமையிலான தேசிய அரசும் மலாய் ஆட்சியாளர்களும் தங்களின் மேலாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தியபோது, அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது .

எ) மாலாயா விடுதலை அடைந்தபின் சீரமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தில், அதற்கு முன் வரையப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பைத் தற்காக்க ரெய்ட் அரசியல் அமைப்புக் குழு தவறி விட்டது.

“ஏறக்குறைய 180 ஆண்டுகளாக இந்த மலாயா மண்ணில் பிரிட்டிஷ் பேரரசின் வல்லாதிக்கத்திற்கு, பொருளாதார ரீதியில் துணை நின்ற இந்தியர்களின் இன்றைய கையறு நிலைக்கு பிரிட்டிஷ் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். “

“இதன் தொடர்பில், பல இடர்களை எதிர்கொண்ட போதிலும் இந்த நிலைய எட்டியுள்ளதன் வழி, ஹிண்ட்ராஃப் நம் சமுதாயப் பெருமையை நிலைநாட்டியுள்ளது.”

“இந்த நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த சிறிய அமைப்பாகக ஹிண்ட்ராஃப் இருந்தபோதும், இந்த நிலையை அடைந்ததை ஒரு வரலாற்று மைல் கல்லாகக் குறிப்பிடலாம்.”

“இதே உத்வேகத்தோடும் எழுச்சியோடும் கடைசிவரை செயல்பட்டு, இந்த வழக்கில் வெற்றியை நிலநாட்ட ஹிண்ட்ராஃப் அயராது பாடுபடும்.”

“சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உள்ளடக்கிய மலாயா வரலாற்றில் நாம் மிகவும் அல்லல்பட்டு, பாதிக்கப்பட்டு, நியாயம் மறுக்கப்பட்டதன் தொடர்பில் எழுந்துள்ள வினாக்களுக்கெல்லாம் இந்த வழக்கின்வழி தீர்வு பிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.”

“மலேசியாவின் இன்றைய அரசியல் களத்தில் உள்ள இரு அணிகளிலும் நம்மை விமர்சனம் செய்வோர் இப்பொழுதாவது உண்மையை உணர முற்படுவர். நாடு வளர்ச்சி அடைந்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு நலிந்த-நசிந்த நிலையில் வாழும் இந்தியர்களுக்காக ஆதரவுக் கரம் நீட்டும் ஹிண்ட்ராஃப், தன் முயற்சியில் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்.”

“இதில், மற்ற இயக்கங்களைப் போல தனிப்பட்ட முறையில் அரசியல் இலக்கோ, கணக்கோ ஏதும் இன்றி சமூக நீதி ஒன்றை மட்டும் இலக்காகக் கொண்டு ஹிண்ட்ராஃப் தன் சமூக நீதிப் போரட்டத்தை முன்னெடுத்துள்ளது; இதில் ஹிண்ட்ராஃப் வெல்லும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.” -இவ்வாறு அந்த பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.