Home படிக்க வேண்டும் 2 எம்டிபி துணைநிறுவனம் 4 பில்லியன் கடனை ஓய்வூதிய வாரியத்திற்கு செலுத்த வேண்டும்

எம்டிபி துணைநிறுவனம் 4 பில்லியன் கடனை ஓய்வூதிய வாரியத்திற்கு செலுத்த வேண்டும்

689
0
SHARE
Ad

1 MDB POSTERகோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமர் நஜிப் தலைமையிலான 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வரும் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி, இப்போது இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கின்றார்.

1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் (SRC International Sdn Bhd) மங்கோலியாவில் ஒரு கனிம வள (Mining – மைனிங்) நிறுவனத்தை வாங்குவதற்காக ஏறத்தாழ 4 பில்லியன் ரிங்கிட் கடனை மலேசியாவின் ஓய்வூதிய சேமநிதி வாரியத்திடம் இருந்து பெற்றுள்ளதாகவும் இதற்காக அரசாங்கமே கடன் உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிறுவனமாக முதலீடுகளில் ஈடுபட வேண்டிய 1எம்டிபி நிறுவனம் இங்கிருந்து மங்கோலியா சென்று ஒரு கனிம நிறுவனத்தை வாங்க வேண்டுமா? அதனால் அப்படி என்ன லாபம்? என்ற கேள்வியும் சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

Rafizi-Ramli-Sliderஅதேசமயத்தில் கடன் வாங்கிய எஸ்ஆர்சி நிறுவனம் 164.35 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தைத் தற்போது அடைந்துள்ளதோடு, வருமானம் எதையுமே தனது வர்த்தகத்தின் மூலம் ஈட்டவில்லை என்றும் ரபிசி சுட்டிக் காட்டியுள்ளார்.

4 பில்லியன் வரை கடன் பெற்றும் எந்த வருமானத்தையும் இந்நிறுவனம் ஈட்டாதது அதிர்ச்சியளிக்கின்றது என்றும் ரபிசி கூறியுள்ளார்.

பிரதமர் நஜிப் அரசாங்க ஊழியர்களின் நலன் கருதி ஓய்வூதிய சேமநிதியிடம் இருந்து பெற்ற கடன் அனைத்தையும் எஸ்ஆர்சி திரும்ப செலுத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்றும் ரபிசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இவையெல்லாம் 1எம்டிபி நிறுவனத்தின் மற்ற நடவடிக்கைகளைப் போலவே ஒரே மாதிரியான திட்டமிடலோடு நடத்தப்பட்டிருக்கின்றது. அதாவது, நிலையான, முறையான வர்த்தகத் திட்டங்கள் ஏதும் இல்லாமல், பெரிய அளவிலான கடன்களை அரசாங்கத்தின் கடன் உத்தரவாதத்தோடு இந்த நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன” என்றும் ரபிசி குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் இந்த விவகாரம் குறித்த வழக்கொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்த ரபிசி இத்தகைய வழக்கைத் தொடுக்க அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

காரணம், இந்த 4 பில்லியன் கடன் பெறப்பட்டது அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமநிதி வாரியத்திடமிருந்து என்பதால் அரசு ஊழியர்கள் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட 1எம்டிபி நிறுவனம் இதுவரை 42 பில்லியன் ரிங்கிட் கடன் சுமையில் மூழ்கித் தத்தளிப்பதோடு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உள்ளிட்ட பலரது கடும் கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.