வாஷிங்டன், மார்ச் 26 – ஜெர்மன்விங்கஸ் விமானம் விபத்திற்குள்ளான சம்பவத்தில் தீவிரவாத தாக்குதல் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின், கருப்பு பெட்டி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் விமான விபத்திற்கு தீவிரவாத தாக்குதல் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், விமான விபத்தில் தீவிரவாதிகளின் சதி இல்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் செய்தித்தொடர்பாளர் பெர்னாட்டி மீஹான் கூறுகையில், “விமான விபத்தில் எந்தவொரு தீவிரவாத செயல்களும் காரணமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
விமான விபத்து தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், “அமெரிக்க அதிகாரிகள் பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் அரசுகளுடன் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
விபத்து நேர்வதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாகவே தீவிரவாத தாக்குதல் தொடர்பான கேள்விகள் எழுந்தன.