Home நாடு 126,000 போலீஸ் அதிகாரிகள் பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளை கவனித்து வருகின்றனர் – ஐஜிபி காலிட் தகவல்

126,000 போலீஸ் அதிகாரிகள் பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளை கவனித்து வருகின்றனர் – ஐஜிபி காலிட் தகவல்

582
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், மார்ச் 26 – பேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து வகையான நட்பு ஊடகங்களிலும் பதிவிடப்படும் தனிநபர்களின் பொறுப்பற்ற, அவதூறான பதிவுகளை மலேசிய தேசிய காவல்படை (The Royal Malaysian Police) கவனித்துக் கொண்டிருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.

நட்பு ஊடகங்களில் பதிவு செய்யப்படும் எந்த ஒரு பதிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற 208 வது காவல்துறை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட காலிட் இது குறித்து மேலும் கூறுகையில், “உதாரணமாக, டிவிட்டரில் ஏதாவது பதிவு ஒன்றை செய்ய விரும்பினால், சமூகப் பொறுப்புணர்வோடு கருத்துக்களை பதிவு செய்யுங்கள். மக்களை தூண்டி விடுவது போன்ற பதிவுகளை தவிர்த்துவிடுங்கள். அவ்வாறு ஏதாவது பதிவுகள் கண்டறியப்பட்டால் குறிப்பாக ஐஎஸ் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவான பதிவுகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெளியிடும் கருத்துக்களிலோ அல்லது அறிக்கைகளிலோ அதிருப்தி ஏற்படும் பட்சத்தில், பொதுமக்கள் டிவிட்டர் நிர்வாகத்திடமோ அல்லது அதிகாரிகளிடமோ தாராளமாகப் புகார் அளிக்கலாம் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

“டிவிட்டர் நிர்வாகம் எனது பக்கத்தை தடை செய்தாலோ அல்லது மூடினாலோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் டிவிட்டரையோ அல்லது பிற நட்பு ஊடகங்களையோ பார்வையிடுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னிடம் 126,000 காவல்துறையினர், 24 மணிநேரமும், டிவிட்டர் மற்றும் நட்பு ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளையும், பல்வேறு நடவடிக்கைகளையும் கவனித்து வருகின்றனர்.” என்று காலிட் கூறியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் பேஸ்புக் பக்கத்தில் இந்துக்களையும், இந்திய சமுதாயத்தையும் அவமதிக்கும் படியான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் பக்கத்தை தற்போது முடக்கி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேஸ்புக் பக்கத்தில் அவ்வாறு எழுதியவரைக் கண்டறிந்து விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தவும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.