மும்பை, மார்ச் 26 – மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அமீர்கான் மற்றும் ரமேஷ் சிப்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கமல் பேசும் போது,“ சினிமாவில் புதியதாக தொழில்நுட்பங்களை புகுத்தும் போது ஒரு விதமான மாய பிம்பம் நம்மிடையே நிலவுகிறது. இப்படியான ஒன்றை முயற்சிக்கும் போது சந்தித்த சோதனைகளையும் துயரங்களையும் நினைக்கவேண்டும்”.
“அனைத்துப் படங்களையும் ஒரே மாதிரியாக கவனிக்க வேண்டும். எனக்குப் பிடித்தமான நடிகர் அமீர்கான், இப்போது என்னுடன் மேடையில் இருக்கிறார்” என்றார் கமல்ஹாசன்.
தொடர்ந்து அமீர்கான் பேசுகையில்,“ எந்த கருத்துகளையும் தடை விதிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கெல்லாம் நான் எதிரானவன்” என்று திரைப்பட தணிக்கைத் துறையைப் பற்றிப் பேசினார். மேலும் விஸ்வரூபம் திரைப்படம் எதிரான பிரச்னைகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அமீர்கான்.