கோலாலம்பூர், மார்ச் 27 – ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஐபோன்களை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடும். குறிப்பிட்ட அந்த சமயங்களில் ஆப்பிளின் தயாரிப்பில் இருக்கும் ஐபோன் பற்றி பல்வேறு ஆருடங்கள் கூறப்படும்.
ஆனால், இம்முறை ஆப்பிள் ஐபோன்கள் பற்றி மார்ச் மாதம் முதல் ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஆப்பிள் வாட்ச்சை அறிமுகப்படுத்திய பிறகு ஆப்பிள் நிறுவனம், வரிசையாக மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் ஆருடங்களைக் கூறுகின்றனர். இது பற்றி டிஜிடைம் எனும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதாவது:-
“ஆப்பிள், தனது ஆப்பிள் வாட்ச் வெளியீட்டிற்குப் பிறகு வரிசையாக மூன்று ஐபோன்களை வெளியிட இருக்கிறது. ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் 4 அங்குல திரை கொண்ட ஐபோன். தற்சமயம் அதன் பெயர் ஐபோன் 6 சி.”
“மேற்கூறிய மூன்று ஐபோன்களும் வெவ்வேறு உள்கட்டமைப்புகள் இருந்தாலும், அவை மூன்றிலும் கைரேகை பதிவு செய்யும் சென்சார்கள் வைக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. மேலும் அவற்றில் ஆப்பிளின் பணப்பரிமாற்ற சேவையான ‘ஆப்பிள் பே’ (Apple Pay)-ம் அவசியம் இடம்பெறும்”
“மேலும் ஆப்பிள், தனது ஐபோன்களில் உள்ள கேமரா தொழில்நுட்பங்களை முற்றிலும் மாற்றி, மூன்று சென்சார்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்த இருக்கின்றனது.”
“அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில ஐபோன்களின் திரைகள் போர்ஸ் டச் தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தப்பட இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
எனினும், மேற்கூறியவை அனைத்தும் ஆருடங்களே. ஆப்பிளை பொருத்தவரை அடுத்தமாதம் ஆப்பிள் வாட்ச் வெளியாவது மட்டும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.