சிங்கப்பூர், மார்ச் 27 – திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நல்லுடல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் மணிக் கணக்கில் கால்கடுக்க நின்று இறுதி மரியாதை செலுத்தி வரும் வேளையில், அவரது புதல்வரும் நடப்பு பிரதமருமான லீ சியன் லூங் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தனது குடும்பப் படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு பழைய நினைவலைகளை பலருக்கும் கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் தனது தந்தை இலண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதும் பின்னர் அங்கு வருகை தந்தபோதும் தனது காதல் மனைவி குவா கியோக் சியூ எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்:
இளவயதில் கேம்ப்ரிட்ஜ் நகரில் இருக்கும் பிரிட்ஜ் ஆஃப் சைஹ் (Bridge of Sighs) என்ற இடத்தில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் லீ குவான் இயூவும் அவரது காதல் மனைவியும். மேலே உள்ள படம் அவர்கள் அங்கு மாணவர்களாக, காதல் பறவைகளாக உலா வந்த காலத்தில் எடுக்கப்பட்டதாகும். பின்னர் கேம்ப்ரிட்ஜ் செல்லும் போதெல்லாம் அதே இடத்திற்கு சென்று நினைவாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் லீ குவான் இயூ தம்பதியினர்.
இந்தப் படம் 1974ஆம் ஆண்டில் சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கின் பட்டமளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படமாகும். “அந்த சமயத்தில் நான் பக்கத்தில் எங்கோ நின்று கொண்டிருந்திருப்பேன்” என தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் லீ சியன் லூங்…
வயது முதிர்ந்த நிலையிலும் நெருக்கமான தம்பதிகளாக உலா வந்த லீ குவான் இயூ தம்பதிகள் அதே கேம்ப்ரிட்ஜ் இடத்தில் 2000ஆம் ஆண்டில் தங்களின் இளமைக் காதலை நினைவு கூரும் வண்ணம் எடுத்துக் கொண்ட படம்.
“இப்போது இருவருமே இல்லை. அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்” என சோகமான வரிகளுடன் தனது முகநூலில் இந்தப் படங்களை பகிர்ந்துள்ளார் லீ சியன் லூங்.