ஏமன், மார்ச் 27 – உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது. ஏமனில் அதிபருக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாக்குதலில் இறங்கியுள்ள அவர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றியுள்ளனர். அதிபர் மன்சூர் காதியின் கோரிக்கையை ஏற்று சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை துவங்கி உள்ளன.
இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள் ஏமனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏமனில் 3500 இந்தியர்கள் வசிப்பதாகவும், அதில் 2500-க்கும் மேற்பட்டோர் சனாவில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.