கோலாலம்பூர், மார்ச் 31 – விமானிகளுக்கு உளவியல் சோதனை நடத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என மலேசிய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மலேசிய விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் அப்துல் மனன் மான்சர் கூறுகையில், “ஜெர்மன்விங்ஸ் சம்பவம் விமானத் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை அவசியமற்றது என்று ஐரோப்பிய நிறுவனங்கள் நினைத்து இருந்தது தவறு என்பதையே இந்த விபத்து உணர்த்துகிறது.”
“விமானிகளுக்கு பெரும்பாலும் உடல் ரீதியான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானிகளுக்கு உளவியல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளனவா என்பது தெரியாமலே போய்விடுகிறது. இதனை சரி செய்ய உளவியல் பரிசோதனைகள் அவசியமானது.”
“விமானிகளுக்கு உளவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இது தான் சரியான தருணம். அரசு அதனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பல உயிர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.