கோலாலம்பூர், ஏப்ரல் 1 – ஏமனில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள 879 மலேசியர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் மலேசியா இறங்கியுள்ளது என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள மலேசியர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர். ஏமன் நாட்டில் உள்ள சனா பகுதியில் 159 மலேசியர்களும், அல்-ஹிடாயா பகுதியில் 45 மலேசியர்களும், ஏடென் பகுதியில் 75 மலேசியர்களும், ஹட்ராமாவுட் பகுதியில் 600 மலேசியர்களும் இருக்கின்றதாகவும், அவர்களை பாதுகாப்பாக மீட்க மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சு ஏமன் அரசிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அனிஃபா கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஏமன் நாட்டில் வசிக்கும் மலேசியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், என்றாலும் அவர்களை பத்திரமாக மீட்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அனிஃபா உறுதியளித்துள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையினர் தொடர்ந்து 6-வது நாளாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.