கராச்சி,டிச.26 – தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வரும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில், நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், கடந்த சில வாரங்களாக இனமோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இதுவரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் சுமார் 30 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.
நேற்று முன் தினம், நசீமாபாத் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குள் புகுந்த வன்முறை கும்பல், கடையின் உரிமையாளர், அவரது 2 சகோதரர்கள், உறவினர்கள் உள்பட 10 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மோத்தி மகால் அருகே உள்ள குல்ஷன் – இ – இக்பால் பகுதியில் நேற்று, மோட்டார் சைக்கிளில் துப்பாக்கி ஏந்தி வந்த இருவர், அஹ்லெ சுன்னத் ஜமாத்தை சேர்ந்த மதகுருவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினார். அவரது கார் டிரைவர், 3 மெய்காப்பாளர்கள், ஒரு போலீஸ்காரர் ஆகிய 5 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர். இன்னொரு சம்பத்தில், போலீஸ் துணை சூப்பிரண்ட் மகனும், சாலையோரமாக நின்றிருந்த மற்றொரு நபரும் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.
நேற்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் கராச்சி நகரில் 7 பேர் பலியாகியுள்ளனர். ஜமாத் தலைவர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் பற்றிய செய்தி பரவியதால், கராச்சியில் மேலும் பதற்றம் நிலவி வருகின்றது.