கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார்.
மலேசியர்கள் யாரும் பிரதமரை நம்புவதில்லை என்றும் அவர் பிரதமராகத் தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் தோல்வி உறுதி என்றும் மகாதீர் கடுமையான வார்த்தைகளால் நஜிப்பைச் சாடியுள்ளார்.
நஜிப் ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் மகாதீர் “மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களோ, சீனர்களோ, இந்தியர்களோ, அல்லது சபா, சரவாக் மக்களோ யாரும் நஜிப்பை இப்போது நம்புவதில்லை. அம்னோவும் அதன் தலைவர்களும் இதனை உணர வேண்டும். நஜிப் தலைமைத்துவம் தொடர்ந்தால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும்” என ‘செடெட்’ (chedet) என்ற தனது வலைப்பதிவில் அவர் எழுதியுள்ளார்.
நஜிப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கவில்லை என சாடியுள்ள மகாதீர் அம்னோ தோல்வியடைந்தால் அதன்பின்னர் மீண்டும் அதனை உயிர்ப்பிப்பது என்பது முடியாத ஒன்றாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அல்தான்துன்யா கொலை வழக்கு
அல்தான்துன்யா கொலை வழக்கு குறித்தும் குறிப்பிட்டுள்ள மகாதீர், மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் சைருல் அசார் உமார் “உத்தரவுகளின்படிதான் நான் செயல்பட்டேன்” எனக் கூறியிருப்பது மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், காரணம் அவர் நஜிப்புக்காக வேலை செய்தார் என்றும் கூறியுள்ளார்.
“இது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். உத்தரவுகளை செயல்படுத்தியதற்காக சைருல் மரண தண்டனையை எதிர்நோக்குவது என்பது மிகவும் கொடுமையானது” என்றும் மகாதீர் பகிரங்கமாக இன்று தனது பதிவில் தெரிவித்திருப்பது பரபரப்பான செய்தியாகியுள்ளது.