Home நாடு 1எம்டிபி பணம் எங்கே? 700 மில்லியன் பெட்ரோ சவுதிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? – நஜிப்பை நோக்கி...

1எம்டிபி பணம் எங்கே? 700 மில்லியன் பெட்ரோ சவுதிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? – நஜிப்பை நோக்கி மகாதீர் கேள்விக் கணைகள்!

869
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர், ஏப்ரல் 2 – நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கடுமையாகக்  குறை கூறி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கட்டுரையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்தும் பல கேள்விக் கணைகளை எழுப்பியுள்ளார்.

அந்நிறுவனத்திற்கு ஏன் 1 பில்லியன் ரிங்கிட் கடன் வசதிகளை அரசாங்கம் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தது எனக் கேள்வி கேட்டுள்ள மகாதீர், அரசாங்க நிலங்களை வாங்கியது, அவ்வளவாகத் தெரியாத பெட்ரோ சவுதி இண்டர்நேஷனல் என்ற எண்ணெய் நிறுவனத்துடன் சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டது போன்ற விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் முதல் திருமணத்தில் பிறந்த புதல்வர் ரிசா அசிஸ் விலையுயர்ந்த சொகுசுக் கட்டிடங்களை நியூயார்க்கில் மற்றொரு வர்த்தகர் லோ தெக் ஜோவுடன் இணைந்து வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்றும் மகாதீர் கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீரின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அண்மையக் காலத்தில், இவ்வளவு கடுமையாக மகாதீர் நஜிப்பை விமர்சித்ததில்லை.

ஏற்கனவே, அரசாங்கத்தின் வசம் சில விமானங்கள் இருக்கும் பட்சத்தில் புதியதாக ஒரு விமானத்தை பிரதமரின் பயன்பாட்டுக்காக வாங்கியதையும் மகாதீர் குறை கூறியுள்ளார்.

பெட்ரோ சவுதிக்கு ஏன் 700 மில்லியன்?

1 MDB POSTERநஜிப் ஆலோசகராக இருந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 1எம்டிபி குறித்த பல குற்றச்சாட்டுகள் மீது இன்னும் முறையான பதில் இல்லை, மாறாக, அவை பொய்கள் என மறுக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகின்றது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோ சவுதி நிறுவனத்திற்கு ஏன் 700 மில்லியன் டாலர் பணம் வழங்கப்பட்டது என்றும் மகாதீர் சாடியுள்ளார். கேமன் தீவுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஏன் இன்னும் சிங்கப்பூரில் உள்ள சுவிட்சர்லாந்து வங்கியில் இருக்கின்றது? எஞ்சிய பணம் என்னவானது? ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ஏன் 2 பில்லியன் கடன் வாங்கப்படுகின்றது என்றெல்லாம், அடுக்கடுக்காக, கொஞ்சமும் தயங்காமல், மகாதீர் நஜிப்பை நோக்கி கேள்விக் கணைகளால் விளாசியுள்ளார்.

1எம்டிபி குறித்து இலண்டன், நியூயார்க் போன்ற நகர்களின் பத்திரிக்கைகள் வெளியிடும் கட்டுரைகள் நமது நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்றன என்றும் இதையெல்லாம் பற்றி கூறுவது தனக்கு மன வலியை ஏற்படுத்துவதாகவும் மகாதீர் வருந்தியுள்ளார்.

“விசுவாசமான பல அம்னோ உறுப்பினர்கள் நஜிப்பின் தலைமைத்துவத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றார்கள். நானும் விசுவாசமானவன்தான். ஆனால் எனது விசுவாசம் கட்சிக்கும் அது பிரதிநிதிக்கும் மலாய் சமூகத்தின் மீதும்தான் இருக்கின்றது” என்றும் மகாதீர் கூறியுள்ளார்.

“இதைப்பற்றி எழுதுவது எனக்கு சுலபமல்ல, ஆனால் எனது இனத்திற்காகவும், நாட்டுக்காகவும் நான் இதையெல்லாம் வெளிக்கொண்டுவர வேண்டும். இதையெல்லாம் நான் சொல்வதால் நான் முதுமையின் தளர்ச்சியால் பேசுகின்றேன் என்று யாரும் என்னை எண்ணி விடவேண்டாம். எனக்கு 90 வயதாகிவிட்டதால், நான் முதுமையின் தளர்ச்சியால் இதையெல்லாம் பேசுகிறேன் என்று யாராவது எண்ணினால் அவர்கள் தங்களைத்தானே முட்டாளாக்கிக் கொள்கின்றார்கள்” என்றும் தனது கட்டுரையில் மகாதீர் கூறியுள்ளார்.