நைரோபி, ஏப்ரல் 3 – கென்யாவில் உள்ள கரிசா பல்கலைக்கழகத்தின் மீது சோமாலியாவின் அல்-சஹாப் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து வட கிழக்கு நோக்கி 370 கி.மீ தொலைவில் இருக்கும் கரிசா நகரின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் மாணவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து தாக்குதல் நடத்தினர். பல மாணவர்களின் தலைகளை துண்டித்தனர். முதற்கட்ட தகவல்களின் படி இந்த தாக்குதலில் 70 மாணவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இறுதிகட்ட தகவல் இன்று வெளியானது. அதன் படி, சுமார் 147 மாணவர்கள் தீவிரவாத தாக்குதலில் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கிறித்தவ மாணவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.