கோலாலம்பூர், ஏப்ரல் 3 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கும் பல கருத்துகளுக்கு, சரவாக் மாநில தேசிய முன்னணி தலைவர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நஜிப்பை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “சரவாக் மக்கள் நஜிப் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக மகாதீர் கூறுவது தவறு. நஜிப்புக்கு இன்னும் மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது. எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சரவாக்கில் நஜிப் துன் ரசாக் பெரும்பான்மையில் வெற்றி பெறுவார்” என்று கூறியுள்ளார்.
நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கடுமையாகக் குறை கூறி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கட்டுரையில்,சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்தும், அல்தான்துயா கொலை வழக்கு குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
“மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களோ, சீனர்களோ, இந்தியர்களோ, அல்லது சபா, சரவாக் மக்களோ யாரும் நஜிப்பை இப்போது நம்புவதில்லை. அம்னோவும் அதன் தலைவர்களும் இதனை உணர வேண்டும். நஜிப் தலைமைத்துவம் தொடர்ந்தால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என்றும் மகாதீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.