சைபர் ஜெயா, ஏப்ரல் 5 – அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரின் தாயாரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
சைருலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது வலைப்பக்கத்தில் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரைச் சந்திக்க விரும்புவதாக சைருலின் தாயார் கூறி இருந்தார்.
இந்நிலையில் சைபர் ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், சைருலின் தாயார் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களை சந்திக்கத் தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
“தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரை கொலைக் குற்றவாளி என்று கூற முடியாது. இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனுடன் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் கொலை செய்யுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாக புகார் கூறியுள்ளார். அவருக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி வெகு காலத்திற்கு முன்பே எழுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய கேள்வி எழுப்பப்பட்டதற்கான அறிகுறி இதுவரை இல்லை. தனது தரப்பை முன்வைக்க சைருலுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,” என்றார் மகாதீர்.
“கொலை செய்யுமாறு சைருலுக்கு உத்தரவிட்டது யார் என தெரியுமா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “நான் பிரதமராக இருந்த போது எனது மெய்க்காப்பாளராக இருந்தார் சைருல். அப்போது அவர் யாரையும் கொல்லவில்லை. எனவே அவருக்கு உத்தரவிட்டது நானாக இருக்க முடியாது,” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
யாரோ ஒருவரது உத்தரவின் அடிப்படையில் சைருல் செயல்பட்டிருந்தால் அவரை தூக்கிலிடுவது நியாயமாக இருக்காது என்று குறிப்பிட்ட மகாதீர், இது ஒரு மனிதனின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றார்.