டாக்கா, ஏப்ரல் 6 – இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று கடும் புயல் தாக்கியது. இதனால் வட பகுதியில் உள்ள போக்ரா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகள் இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலியாகினர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
மேலும், 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த சூறாவளியால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அதன் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வங்காளதேசத்தின் இளவேனில் பருவத்தில் தற்போது தான் முதன் முறையாக கடுமையாக புயல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.