புதுடெல்லி, ஏப்ரல் 7 – இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிக்கப்படும் என பிரதமர் மோடி, இஸ்லாமிய தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
இஸ்லாமிய தலைவர்களான சென்னையை சேர்ந்த சையது அலி அக்பர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹாஜி அப்துல் ஹபீஸ் கான், மௌலானா அபுபக்கர் பசானி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சையத் அப்துல் ரசீத் அலி உள்பட 10 தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.
அப்போது சமூக சூழ்நிலைகளை சீர்படுத்துதல், இஸ்லாமிய இளைஞர்களுக்கான கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து, இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிப்பதாகவும்,
குறிப்பாக மசூதிகள், மதரசாக்களில் உள்ள கோரிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மோடி உறுதி அளித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்களும், நாட்டின் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் பாடுபடுவோம் என உறுதி அளித்தனர்.