இஸ்லாமாபாத், ஏப்ரல் 7 – ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதே நேரத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக உதவி வருகிறது. சவுதி அரேபியாவுக்கு 10 நட்பு நாடுகள் உதவுகின்றன. இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தங்களுக்கு உதவும்படி பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.
தங்களுக்கு விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை வழங்கி உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ராணுவ வீரர்களை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது.
அதில் பேசிய ராணுவ அமைச்சர் ஹவாஜா ஆசிப் இந்த தகவலை தெரிவித்தார். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் நட்பு நாடான ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஷரீப் நாளை 8–ஆம் தேதி இஸ்லாமாபாத் வருகிறார்.
அவருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு தான் சவுதி அரேபியா கோரிக்கை ஏற்கப்படுமா? என தெரியவரும். ஏமனில் சவுதி அரேபியா குண்டுவீச்சு நடத்துவதை ஈரான் ஏற்கனவே விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.