Home இந்தியா ஐபிஎல் தொடக்க விழா: மழையினால் இரண்டரை மணி நேரத் தாமதம் – இருப்பினும் வண்ணமயமான நட்சத்திர...

ஐபிஎல் தொடக்க விழா: மழையினால் இரண்டரை மணி நேரத் தாமதம் – இருப்பினும் வண்ணமயமான நட்சத்திர கோலாகலம்!  

560
0
SHARE
Ad

கொல்கத்தா, ஏப்ரல் 8 – (நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கவிழா இந்தியத் தொலைக்காட்சிகளிலும், இணையத் தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சி குறித்த நேரடி வர்ணனை)

Anushka Sharma at IPL Opening 2015

ஐபிஎல் தொடக்க விழாவில் அனுஷ்கா சர்மா 

#TamilSchoolmychoice

நேற்று மாலை இந்திய நேரப்படி 7 மணியளவில் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழா கனத்த மழையின் காரணமாக ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் தடைபட்டது.

இருப்பினும் மழைவிட்ட பின்னர், இரண்டரை மணி நேரத் தாமதத்திற்குப்பின்னர் தொடங்கிய விழா கோலாகலமாகவும், பாலிவுட் நட்சத்திரங்களின் பங்கேற்பினால் கலகலப்பான, வண்ணமயமான திருவிழாவாகவும் அரங்கேற்றம் கண்டது.

பிரம்மாண்டமான மேடை – லேசர் ஒளிக் கீற்றுகள்- வண்ண விளக்குகளின் அலங்காரங்கள் – இவற்றுக்கு நடுவான கவர்ச்சிகரமான பிரபல பாலிவுட் நடிகர்கள் என ஐபிஎல் தொடக்க விழா அமர்க்களமாக நடைபெற்றது.

நிகழ்ச்சி அறிவிப்பாளராக சைப் அலிகான்

IPL Team Captains 2015

ஐபிஎல் கிண்ணத்துடன் இந்த ஆண்டு மோதும் குழுக்களின் தலைமை விளையாட்டாளர்கள்

நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் பணியாற்றினார். இவர் இந்திய அணியின் முன்னாள் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) பட்டோடி நவாப் கானின் புதல்வர் என்பது மற்றொரு நினைவுகூரத்தக்க அம்சமாகும்.

சைப் அலிகானின் அறிமுகத்தைத் தொடர்ந்து மேடையேறிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, விளையாடும் ஒவ்வொரு குழுவின் கேப்டனையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அனைத்து குழுக்களின் கேப்டன்களும் தாங்கள் கண்ணியமான, நியாயமான விளையாட்டு வரைமுறைகளைக் கடைப்பிடிப்போம் என உறுதிமொழி எடுக்கும் விதமாக ஒரு கிரிக்கெட் மட்டையில் ஒருவர் ஒருவராக கையெழுத்திட்டனர். இந்திய கிரிக்கெட் அணி, மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) மகேந்திரசிங் தோனி முதலாவதாக இந்த உறுதிமொழிக் கையெழுத்தை இட்டார்.

பாலிவுட் நடிகர் ஷாகிட் கபூர்

பின்னர் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியபோது, ஒரு பெரிய மோட்டார் சைக்கிளில் மேடையில் தோன்றிய பிரபல பாலிவுட் நடிகர் ஷாகிட் கபூர் நிகழ்ச்சியின் முதல் பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அடுத்ததாக இரண்டாவது அங்கத்தை பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஒரு பெரிய நடனக் குழுவினரோடு படைத்தார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்கு அனுஷ்கா சர்மாவின் காதலர் வீராட் கோலி தலைமை தாங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் பார்ஹான் அக்தார் மேடையில் தனது இசைக் குழுவோடு பாடி, ஆடி இரசிகர்களை அசத்தினார்.

உச்சகட்டமாக ஹிருத்திக் ரோஷன்

Hrithik Roshan IPL Opening 2015

ஹிருத்திக் ரோஷன் 

ஐபிஎல் தொடக்க விழாவின் உச்சகட்ட அங்கமாக அமைந்தது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை மேடையில் பாடி நடனமாடியது. அதோடு, தனது சில பிரபல படங்களின் பாடல்களின்போது கடைப்பிடித்த அபிநயங்களையும் மேடையில் ஆடிக் காட்டி இரசிகர்களை மகிழ்வித்தார் ஹிருத்திக்.

அதன்பின்னர் இரசிகர்களுக்கான ஒரு சிறிய உரையை ஆற்றினார் ஹிருத்திக் ரோஷன். அத்துடன் ஐபிஎல் தொடக்க விழா ஒரு நிறைவை நாடியது.

இன்றைய முதல் ஆட்டம் கொல்கத்தா ரைடர்ஸ் – மும்பாய் இண்டியன்ஸ்

இன்று முதல் ஐபிஎல் ஆட்டங்கள் தொடங்குகின்றன.

கொல்கத்தாவில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.00 மணிக்கு நடைபெறும்  ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கடந்த ஆண்டின் (2014) வெற்றியாளரான கொல்கத்தா ரைடர்ஸ் அணி, 2013 ஆண்டின் வெற்றியாளரான மும்பாய் இண்டியன்ஸ் அணியுடன் மோதுகின்றது.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆவார். மும்பாய் அணியின் உரிமையாளர் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி ஆவார்.

-இரா.முத்தரசன்