உயிருக்கு பயந்து ஏமன் அதிபர் சவுதி அரேபியா தப்பி சென்றுவிட்டார். ஏமன் ராணுவத்திற்கு துணையாக சவுதி அரேபிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த ஒரு வாரமாக குண்டுகளை வீசி வருகிறது.
இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏமனில் பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் கடல் மற்றும் விமானம் வழியாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.
ஏமனில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டவரை மீட்க இந்தியா உதவ வேண்டும் என 26 நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையில் ஏடன் துறைமுக நகரை பிடிக்க கிளர்ச்சியாளர்கள் நேற்று உக்கிரமாக போர் செய்தனர்.
அவர்களுக்கு எதிராக அரசு படைகளும், சவூதி ராணுவமும் தீவிர யுத்தம் செய்தது. இந்த போரில் 140 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் 19 பேரும், அரசு படையை சேர்ந்த 15 பேரும் அடங்குவர். மற்றவர்கள் பொது மக்கள் என தெரிகிறது.
சுமார் 48 டன் மருத்துவ பொருட்கள் ஏமன் கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், அதற்கு அரசும், கிளர்ச்சியாளர்களும் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.