சிங்கப்பூர், ஏப்ரல் 9 – தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சிங்டெல்’ (Singtel) சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘டிரஸ்ட்வேவ்'(Trustwave)-ஐ 810 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
இதுவரை தொலைத்தொடர்பு சேவைகளை மட்டும் செய்து வந்த சிங்டெல் நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனது அடுத்த கட்ட மேம்பாட்டிற்காக டிரஸ்ட்வேவ் நிறுவனத்தை வாங்கி உள்ளது.
இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மட்டுமல்லாது, டிஜிட்டல் விளம்பரங்கள், செல்பேசித் தளங்களுக்கான காணொளிகள், சைபர் பாதுகாப்பு போன்றவற்றை செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிங்டெல் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதலே உலகளாவிய டிஜிட்டல் வர்த்தகத்திற்கு தயாராகி வருகின்றது. இதற்காக சுமார் 900 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது.
டிரஸ்ட்வேவ் நிறுவனம் வாங்கப்பட்டது குறித்து சிங்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா சாக் கூங் கூறுகையில், “டிரஸ்ட்வேவ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சைபர் பாதுகாப்பில் உலகளாவிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.