Home இந்தியா பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!

1403
0
SHARE
Ad

சென்னை, ஏப்ரல் 9 – தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நவீன தமிழ் எழுத்துலகத்தைப் புதிய பாதையில் செலுத்திய பெருமைக்குரிய பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் நேற்று காலமானார்.

இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர். அவர் சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்தார். அவருக்கு 2 மனைவிகள், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

Jayakanthan writerஜெயகாந்தன், கடலூரில் 1934-ஆம் ஆண்டு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

#TamilSchoolmychoice

கடந்த 2002-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்.

மேலும், 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறையாகப் பெற்றார். இது தவிர, 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 2011-ஆம் ஆண்டு ரஷிய விருதும் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்…

பல தமிழ் நாட்டு எழுத்தாளர்களைப் போலவே பல்கலைக் கழகப் படிப்பு எதனையும் பெறாமல் எழுத்துத் துறையில் சாதித்துக் காட்டியவர் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். தனது 12-ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவரது மாமா கம்யூனிஸ கொள்கைகளையும், சுப்பிரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் உறவினர்களால் கம்யூனிச சித்தாத்தங்களில் ஈர்க்கப்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக்காலத்தை கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு பரிச்சயமானார்.

கல்விக்கு முக்கியத்துவர் கொடுக்கும் கம்யூனிசக் கட்சி மூலம் ஜெயகாந்தன் தனது கல்வியறிவை விரிவாக்கிக்கொண்டார்.

கட்சியின் அப்போதைய தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம், அவருக்குத் தமிழாசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை பார்த்தார்.

காலப்போக்கில் கம்யூனிச கொள்கைகளிலிருந்து மாறுபட்ட ஜெயகாந்தன், காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் அவரது தொண்டனாக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயகாந்தன் தனது இலக்கிய வாழ்க்கையை 1950-களில் தொடங்கினார். “சரஸ்வதி’, “தாமரை’, “கிராம ஊழியன்’, “ஆனந்த விகடன்’ “அமுதசுரபி’, “தினமணி கதிர்’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது படைப்புகளான “உன்னைப் போல் ஒருவன்’, “சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. “உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

படைப்புகள்

ஜெயகாந்தன், பல்வேறு வாழ்க்கை வரலாறு, நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். “வாழ்விக்க வந்த காந்தி 1973′, “ஒரு கதாசிரியனின் கதை’, “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, “ரிஷிமூலம்’, “கருணையினால் அல்ல’, “கங்கை எங்கே போகிறாள்’ ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

தனது சிறந்த படைப்புகளால் காலத்தை வென்ற ஜெயகாந்தனின் இறுதிச் சடங்குகள் சென்னை வடபழனி ஏவிஎம் மயானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.