டோக்கியோ, ஏப்ரல் 9 – நடுவானில் ஏற்பட்ட திடீர் இன்ஜின் பழுது காரணமாக ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை காலை டோக்கியோவிலிருந்து வடக்கு ஹொகாய்டோ தீவுக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 228 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதனுடைய வலது இன்ஜினின் செயல்பாடு திடீரென நின்றுபோனது.
இதையடுத்து, விமானத்தை டோக்கியோவில் தரையிறக்க விமானிகள் அனுமதி கேட்டனர். அனுமதி கிடைத்ததை அடுத்து, பயணப் பாதையிலிருந்து திரும்பிய அந்த விமானம் தோக்கியோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என ஜப்பான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் இன்ஜின் செயல்பாடு திடீரென நின்றதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.