புதுடெல்லி, ஏப்ரல் 9 – போர் மேகம் சூழ்ந்த ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 4 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளது மத்திய அரசு. இதையடுத்து, இந்தியர்களை மீட்பதற்காக கடற்படை, விமானப்படை இணைந்து ‘ராகத்’ எனும் பெயரில் நடத்திய கூட்டு நடவடிக்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
இதுவரை 4 ஆயிரம் இந்தியர்கள், 26 நாடுகளைச் சேர்ந்த 500 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஏமன் நாட்டில் அரசை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 19-ஆம் தேதியிலிருந்து கடுமையாகப் போரிட்டு வருகின்றனர்.
ஏமனுக்கு ஆதரவாக, சவுதி அரேபிய கூட்டுப்படைகளும் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏமனில் சிக்கித்தவிக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக ‘ராகத்’ எனும் பெயரில் கடற்படை, விமானப்படை, இணைந்து மீட்புப்பணியில் இறங்கின. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஐ.என்.எஸ். சுமித்ரா, ஐ.என்.எஸ். மும்பை, ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல்கள் மூலமாகவும், ஏர் இந்தியா விமானம் மூலமாகவும் இந்தியர்கள் 5 கட்டங்களாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இந்தியர்கள், ஜிபோட்டி தீவில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். ஜிபோட்டி தீவில் தங்கியிருந்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், பார்வையிட்டு,
“இந்த நடவடிக்கையில் மனிதாபிமான அடிப்படையில் வெளிநாட்டவர்களையும் அடிப்படையில் இந்திய கடற்படை, விமானப்படையினர் மீட்டனர். ஏமனின் தலைநகரான சனாவில் கடுமையான குண்டுவீச்சு நடந்துவருகிறது”.
“அந்த பகுதியில் சிக்கித் தவித்த 574 இந்தியர்கள் 3 விமானங்கள் மூலமாகவும், அல்ஹதிதா நகரில் சிக்கியிருந்த 479 பேர் கப்பல்கள் மூலமாகவும் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்”.
“அவர்கள் பத்திரமாக ஜிபோட்டி தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். சனாவில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள இந்தியர்கள் கடைசி கட்ட மீட்பில் இணைய வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே ஏமனின் முகாலா நகரில் சிக்கித்தவித்த 11 இந்தியர்கள் பாகிஸ்தான் கடற்படையால் மீட்கப்பட்டு, கராச்சி நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த 11 இந்தியர்களும், தனிவிமானம் மூலமாக இந்தியாவிற்கு இன்று அழைத்துவரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.