பெங்களூரு, ஏப்ரல் 9 – இந்திய சந்தைகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாத ஆப்பிள் நிறுவனத்திற்கு, 2014-2015 நிதியாண்டு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த நிதியாண்டில் ஆப்பிளுக்கான இந்திய வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
ஆசிய அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கிய சந்தைகளாக இருப்பது இந்தியாவும், சீனாவும் தான். இந்திய சந்தைகளைக் காட்டிலும் சீன சந்தைகளுக்கு முக்கியத் துவம் அளித்த ஆப்பிள், அங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தியாவில் ஆப்பிள் விட்டுச் சென்ற வெற்றிடத்தைக் கைப்பற்றிய சாம்சுங் பயனர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், சீன அரசு ஆப்பிளுக்கு தொடர் தடைகள் விதித்து வருவதால், இந்திய சந்தைகளின் பக்கம் தனது கவனத்தை திருப்பிய ஆப்பிள், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ற்கு பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொண்டது. அதன் பலனாய், 2013-2014-ம் நிதியாண்டைக் காட்டிலும், 2014-2015 நிதியாண்டில், ஆப்பிளுக்கு 40 சதவீத வர்த்தக உயர்வு கிடைத்துள்ளது.
இதன் மூலம் கடந்த நிதியாண்டில் ஆப்பிள், 1 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை முதல் முறையாக எட்டி உள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆப்பிள் இந்திய சந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.