Home நாடு இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் தலைவர் நஜிப் – சுப்ரா ஆதரவு

இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் தலைவர் நஜிப் – சுப்ரா ஆதரவு

400
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – டத்தோஸ்ரீ நஜிப் வழி இந்திய சமுதாயத்துக்கு நம்பிக்கையூட்டும் தலைமைத்துவம் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

subra-health-dentists-1

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேசிய முன்னணி கூட்டணியில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டை அறிமுகப்படுத்திய முதல் பிரதமர் நஜிப் தான் என்று அவர் பாராட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்தியர்கள் குறித்தும் பிரதமரின் மனம் சிந்திக்கிறது. பிரதமராக பதவி ஏற்றதுமே தனது கட்சியின் முந்தைய தவறுகளுக்கு அவர் மன்னிப்பு கோருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘நடந்தவை நடந்ததுதான், என்னால் இந்திய சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும். என்னை நம்பி என்னோடு இணையுங்கள். வெற்றியை இணைந்து ருசிப்போம் என்பது உறுதி’ என்று அவரது முதல் உரையிலேயே குறிப்பிட்டார்.

“இதையடுத்து இந்தியர்களின் மோசமான வாழ்க்கை நிலை மற்றும் கல்வி நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்க இரண்டு முழு அமைச்சர் பதவியை அளித்தவர் நஜிப்தான்,” என்று டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்தியர் நலனில் அக்கறை கொண்டு, அச்சமுதாயத்தின் தேவைகளை நஜிப் கேட்டறிகிறார் என்பது தெளிவாகத் தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியர்களின் தேவைகளை கவனிப்பதற்காக சிறப்பு அமைச்சரவை குழு ஒன்றையும் பிரதமர் அமைத்ததாக தெரிவித்துள்ளார்.

Special Indian Task Force (SITF) மூலம் இதுவரை 6590 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், SECRETARIAT FOR EMPOWERMENT OF INDIAN ENTREPRENUERS (SEED) மூலம் இந்திய தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக 18 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“குறைந்த மதிப்பெண் பெறும் இந்திய மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளிக்கவும் நாட்டின் நிதிநிலை அறிக்கையில் முதன்முறையாக கடந்த 2013ல் 5 மில்லியன் ஒதுக்கப்பட்டது. தமிழ்ப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க பிரதமர் நஜிப் இதுவரை தவறியதில்லை.

“கடந்த 2009 முதல் 2013 வரை தமிழ்ப் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்ய, அவை இடம்பெயர, புதுப்பிக்க 540 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 புதிய தமிழ்ப் பள்ளிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளை கட்ட இந்திய குத்தகையாளர்களுக்கு முதன்முறையாக தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மெட்ரிகுலேஷன் படிப்பில் இந்திய மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை 500ல் இருந்து 1500 மாணவர்களாக பிரதமர் உயர்த்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

“அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் நஜிப் நல்ல தலைவராக இருக்கிறார் என்பதே உண்மை. அவரது தலைமைத்துவத்தின் கீழ் தான் இந்து கோவில்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்றுவரை, 1300 கோவில்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் அளிக்கப்பட்டுள்ளது,” என்று டத்தோஸ்ரீ சுப்ரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.