பனாமாசிட்டி, ஏப்ரல் 12 – அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பு, உலக நாடுகளிடையே ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் 50 ஆண்டுகாலப் பகை மறந்து, புதிய நட்பு மலர்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
கியூபாவும், அமெரிக்காவும் ஆரம்பக் காலம் தொட்டே பகை நாடுகளாக இருந்து வருகின்றன. பிடல் காஸ்ட்ரோ பெரும் புரட்சி செய்து கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பும், அமெரிக்காவுடனான பகை தொடர்ந்தது. அதனை மெய்பிக்கும் விதமாக ஐ.நா மாநாட்டில், அவர் அமெரிக்காவிற்கு எதிராக மிக நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பதவி விலகினார்.
புதிய அதிபராக பிடலின் சகோதரர் ராவுல் பொறுப்பேற்ற பின்பும் அமெரிக்காவுடனான உறவில் மாற்றம் ஏற்பட வில்லை. இந்நிலையில் சமீபத்தில், இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு, சுமூக நிலை ஏற்பட்டது. அதன்படி, ஒபாமா-ரவுல் சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நேற்று பனாமாசிட்டியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஒபாமாவும், ராவுல் காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்டனர். மேலும், இன்று இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்த தனிமையில் சந்தித்துப் பேச இருப்பதாக கியூபா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.