சிங்கப்பூர், ஏப்ரல் 15 – காலையில் செல்லும் நடைப்பயிற்சி முதல், அன்றாடம் தான் சந்திக்கும் பொது மக்கள், இயக்கங்கள், பழைய நண்பர்கள் வரை பல சுவையான தகவல்களை பேஸ்புக்கில் எழுதி வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்.
இதன் காரணமாக எப்போதும் தனது நாட்டு மக்களுடன் நெருக்கமான உறவிலும் இருந்து வருகின்றார்.
லீ-ன் நேற்றைய பேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் ஊழல் விவகாரங்களின் விசாரணை ஆணையத்தின் (Corrupt Practices Investigation Bureau) ‘லிம் காபி விருந்து’ அழைப்பை ஏற்று தான் சென்றதாகவும், அங்கு, சிங்கப்பூரில் ஊழலை ஒழிப்பது பற்றியும், அதை எதிர்க்கொள்வதில் உள்ள சவால்கள் பற்றியும் விளக்கமும், கலந்துரையாடல்களும் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளுடன் லீ சியான் லூங் – படம்: லீ சியான் பேஸ்புக்)
சிங்கப்பூரை ஊழல்களில் இருந்து தடுத்து சுத்தமாக வைத்திருப்பதற்கு போராடும் அந்த குழுவினருக்கு தனது நன்றியையும் லீ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூர் மக்களுக்கு பேஸ்புக் வாயிலாக தனது வாழ்த்துகளைக் கூறிக் கொண்ட லீ சியாங் லூங், “இன்று தமிழ்ப் புத்தாண்டு துவங்குகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியர்களில் வெவ்வேறு பிரிவினர், வெவ்வேறு நாட்களில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.
– ஃபீனிக்ஸ்தாசன்