கொழும்பு, ஏப்ரல் 15 – இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தற்போதைக்கு விசாரணை நடத்தப்படாது என இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் அஜித் பெரேரா கூறியிருப்பது ஈழத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டிலேயே பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறிசேன அரசு 6 மாதம் அவகாசம் கோரியதால்,
ஐ.நா மனித உரிமைகள் அவையில் இது குறித்து கடந்த மாதம் நடைபெற இருந்த விவாதம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள் போர்க்குற்ற விசாரணை நடத்தி ஐ.நா மனித உரிமைகள் அவையில் இலங்கை அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் எப்படி விசாரணை நடத்தப் போகிறோம் என்பதை மட்டுமே செப்டம்பரில் அறிக்கையாக தாக்கல் செய்யப் போவதாக இலங்கை வெளியுறவு இணை அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.
தாங்கள் விசாரணை நடத்தும் முறைக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் அவையில் ஒப்புதல் பெற்ற பிறகே, விசாரணையை துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசே விசாரணை நடத்த உள்ளதால் இவ்விவகாரத்தில் அனைத்துலக விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.