கோலாலம்பூர், ஏப்ரல் 4 – மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணி மே மாதத்துடன் நிறைவடைவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தேடும் கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என நம்பப்படுகின்றது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில், செயற்கைக் கோள் தகவல்களின் அடிப்படையில் விமானம் இறுதியாக விழுந்து நொறுங்கியதாக நம்பப்படும் இடத்திலிருந்து கூடுதலாக 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டை நடத்த மூன்று நாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம், மே மாதம் வரையில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், கூடுதலாக 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு மொத்தம் 120,000 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பளவில் தேடுதல் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.
இதன் மூலமாக மே மாதத்துடன் தென்னிந்த பெருங்கடலில் நடைபெற்று வரும் தேடுதல் பணி நிறுத்திக் கொள்ளப்படும் என்ற ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றி மேலும் விரிவான தகவல்களை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.