ஜித்ரா, ஏப்ரல் 16 – கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகுவதற்கான தகுந்த காரணங்கள் ஏதுமில்லை என டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
தாம் வகிக்கும் இப்பொறுப்பானது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தந்தது என்று அவர் கூறியுள்ளார்.
“இந்தப் பொறுப்பில் இருந்து விலகத் தகுந்த காரணம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. மேலும் அவ்வாறு பதவி விலக பெரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை,” என்று முக்ரிஸ் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 24ஆம் தேதி முக்ரிஸ் பதவி விலக இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கெடா மாநில அம்னோ தலைவராகவும் பதவி வகிக்கும் முக்ரிஸ், பிரதமர் நஜிப்புக்கான தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமென்றும், அவ்வாறு செய்யாவிட்டால் மந்திரிபெசார் பதவியிலிருந்து அவர் விலக வேண்டுமென்றும் புக்கிட் லாடா சட்டமன்ற உறுப்பினரான டத்தோ அகமட் லெபாய் சுடின் அண்மையில் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நஜிப் தலைமைத்துவம் குறித்த நிலைப்பாட்டை கெடா மாநில அம்னோ ஏப்ரல் 24ஆம் தேதி முடிவு செய்யும் என முக்ரிஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் முக்ரிசின் தந்தையுமான துன் மகாதீர் தொடர்ந்து நஜிப்புக்கான எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதால், முக்ரிஸ் நெருக்கடியான, இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் தற்போது தள்ளப்பட்டுள்ளார்.