Home நாடு பெஜூவாங் கட்சி : அன்வார் அல்லது ஷாபி அப்டாலை ஆதரிக்கும்!

பெஜூவாங் கட்சி : அன்வார் அல்லது ஷாபி அப்டாலை ஆதரிக்கும்!

684
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவும், தேசிய முன்னணியும் இஸ்மாயில் சாப்ரியை பிரதமர் வேட்பாளராக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில் பெஜூவாங் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக யாருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்துக் கருத்துரைத்த பெஜூவாங் கட்சியின் தலைவர் முக்ரிஸ் மகாதீர், 2018-இல் வாக்காளர்கள் ஆட்சி அதிகாரம் வழங்கிய பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே தங்களின் கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) மாமன்னருடனான சந்திப்புக் கூட்டத்தில் முக்ரிஸ் மகாதீர் கலந்து கொண்டார். அது குறித்தும் தங்களின் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் முக்ரிஸ் மகாதீர் ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கிய பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த வகையில் அன்வார் இப்ராகிம் அல்லது ஷாபி அப்டால் ஆகிய இருவரில் ஒருவரை ஆதரிப்போம் எனக் கூறியிருக்கிறார் முக்ரிஸ். அதே வேளையில் இஸ்மாயில் சாப்ரிக்கான ஆதரவிலும் நாங்கள் திறந்த மனதுடன் செயல்பட விரும்புகிறோம் என முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

மகாதீரைச் சந்தித்த இஸ்மாயில் சாப்ரி

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் இஸ்மாயில் சாப்ரி கடந்த  ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீரை அவரின் இல்லம் சென்றுச் சந்தித்து ஆதரவு கோரினார்.

எனினும், மகாதீர் இதுவரையில் தனது கட்சி சார்பாக யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை.

மாறாக, அரசியல்வாதிகள் அல்லாத தேசிய மீட்சி மன்றம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் கொவிட் பிரச்சனைகளும், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இன்று புதன்கிழமைக்குள் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களின் பிரதமர் தேர்வைத் தெரிவிக்க வேண்டும் என மாமன்னர் கேட்டுக் கொண்டிருப்பதால், பெஜூவாங் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் தேர்வைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.