கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் மற்றொரு அதிரடித் திருப்பமாக இன்று இரவு அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியை அங்கீகரித்தது.
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமராக யாரை ஆதரிப்பது என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அம்னோ தெரிவித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.
115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தற்போது அவர் கொண்டிருக்கின்றார். அம்னோவின் உச்சமன்றம் இன்று இஸ்மாயில் சாப்ரியை ஆதரிக்க முன்வந்திருப்பதை அடுத்து, அம்னோவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரையே பிரதமராக ஆதரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முன்னணியின் சார்பில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மஇகா -1, மசீச 2, சபாவின் பிபிஆர்எஸ் 1 – என அந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்கனவே இஸ்மாயில் சாப்ரியை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
இஸ்மாயில் சாப்ரி பிரதமராக நியமிக்கப்பட்டால், பெர்சாத்து கட்சியின் ஹம்சா சைனுடின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹம்சா, மொகிதினின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.
மொகிதின் யாசின் பதவி விலகுவதைத் தொடர்ந்து ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்தையே தக்க வைத்துக் கொள்ள அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
புதிய பிரதமராக அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சாப்ரி, துணைப் பிரதமராக பெர்சாத்து கட்சியின் சார்பில் ஹம்சா சைனுடின் ஆகியோரை முன்னிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.