கோலாலம்பூர், ஏப்ரல் 17 – அண்டிரொய்டு பயனர்கள் இனி தங்கள் கைகளாலும் குறுந்தகவல்களை எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக கூகுள், ‘ஹேன்ட்ரைட்டிங் இன்புட்‘ (Handwriting Input ) எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இந்த செயலியைக் கொண்டு நாம், தமிழ் உட்பட 82 மொழிகளில் எழுத முடியும்.
திறன்பேசிகளில் குறுந்தகவல் அனுப்புவது என்பதே அலாதியான மகிழ்ச்சிதான். அதிலும், நமது கைகளால் திறன்பேசியில் எழுதி குறுந்தகவல் அனுப்ப முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த வசதியினை ஹேன்ட்ரைட்டிங் இன்புட் செயலி நமக்கு அளிக்கிறது.
கூகுள் தனது ட்ரான்ஸ்லேடர் செயலியில் ‘இமேஜ் ரிகக்னேஷன்’ (Image Recognition), ‘சவுண்ட் ரிகக்னேஷன்’ (Sound Recognition) போன்ற அடிப்படை தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தியது போன்று இந்த செயலியில், ‘ஆப்டிகல் கேரக்டர் ரிகக்னேஷன்‘ (Optical Character Recognition) என்ற முறையைப் பயன்படுத்தி உள்ளது.
இதன் மூலம், கைகளால் எழுதப்படும் எழுத்துக்கள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டு திரையில் காண்பிக்கப்படுகிறது. இதில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் இமோஜிகளையும் வரைந்து அனுப்ப முடியும்.
கூகுள் ப்ளே ஸ்டாரில் இந்த செயலியை பயனர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பேனாவில் எழுதுவது போல் எழுத்துக்கள் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனினும், தொடுதிரையில் எழுதிப் பழகிவிட்டால், நாளடைவில் ‘கீ-போர்ட்‘ (Keyboard)-ன் பயன்பாடு குறைந்துவிடும்.
இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு இணையம் தேவையில்லை என்பது கூடுதல் தகவலாகும்.