கோலாலம்பூர், ஏப்ரல் 18 – ஆப்பிள் வாட்ச் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊடக நிறுவனங்களும் சிறிய திரைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகி வருகின்றன.
பக்கம் பக்கமாக அச்சிடப்பட்டு வெளியான செய்திகள், கணினித் திரைகளுக்குள் புகுந்து கொண்டது தான் ஊடகத்துறையில் ஏற்பட்ட புத்தாக்கத்திற்கான முதல் அத்தியாயம். அச்சிடப்படும் செய்திகள் இணைய பக்கங்களாக வெளியாகின. அதன் பின்பு, கணினிகளின் வேலை சுருங்கி அதன் இடத்தை திறன்பேசிகள் ஆக்கிரமித்ததால், ஊடகங்களும் தங்களை சுருக்கிக் கொண்டன.
நவீன யுகத்தில், செய்திகளை படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாத வாசகர்களே அதிகம் என்பதால், செய்திகளுக்கான இணைய தளங்கள் செயலிகளாக உருமாறின. நிமிடத்திற்கு நிமிடம் உலக நிகழ்வுகளை வாசகர்கள், திறன்பேசிகளில் ஒற்றை அழுத்தத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்நிலையில் தான், ஆப்பிள் திறன்பேசிகளுக்கு நிகராக ஆப்பிள் வாட்ச்-ஐ தயாரித்துள்ளது. இணையம் முதல் கார் சாவி வரை அனைத்து அம்சங்களும் இதில் உள்ளதால், ஊடகத்துறை அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறது. இந்த மாற்றம் தான் ஆங்கிலத்தில் ‘க்ளான்ஸ் ஜர்னலிசம்’ (glance journalism) என்று கூறுகின்றனர். மிகச் சுருக்கமான, சுவாரசியமான தலையங்கம். அதனை பார்த்தவுடன் மேற்கொண்டு படிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவு பயனர்களின் வசம் ஒப்படைக்கப்படும்.
ஊடகத்துறையை கைக்கடிகாரத் திரைக்குள் அடைத்து விட முடியுமா என்ற கேள்விக்கு ‘நியூஸ் ரிபப்லிக் அப்ளிகேசன்’ (News Republic Application) நிறுவனத்தின் தலைவர் கில்ஸ் ரேமண்ட் கூறுகையில், “மாற்றங்கள் என்றும் மாறாது. டுவிட்டர் ஏற்றுக் கொள்ளப்பட்டது போல் இதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.