Home இந்தியா தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவிற்கு ஜாமீன் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவிற்கு ஜாமீன் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

516
0
SHARE
Ad

Jayaபுதுடெல்லி, ஏப்ரல் 18 – சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, தீர்ப்பு வரும் வரை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க கால அவகாசத்தை மே 12-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடியே 1 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்த தண்டனையை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய குழு, 4 பேருக்கும் டிசம்பர் 18-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி உத்தரவிட்டனர்.

அப்போது, 3 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 41 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு தனி நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த ஜாமீன் காலம் டிசம்பர் 18-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான குழு, ஜாமீன் காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஜாமீன் அவகாசம் ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது.

இதையடுத்து, தங்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழுவிற்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்; “கடிதத்தில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நாங்கள் உத்தரவிட்டதை அமல்படுத்தும் கால அவகாசத்தை மே 12-ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.

ஜெயலலிதா உள்ளிட்ட மனுதார்கள் 4 பேருக்கும் 2014 அக்டோபர் 17-ஆம் தேதி வழங்கிய ஜாமீன் மேல் முறையீட்டு வழக்கு முடியும் வரை நீட்டிக்கப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.