ஏடன், ஏப்ரல் 18 – ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது.
அந்நாட்டு ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சி படையினருக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏமன் நாட்டுக்கு ஆதரவாக சவுதி அரேபியா கூட்டுப்படையினர் போரிட்டு வருகின்றனர்.
கடந்த 3 வாரங்களாக நடைபெற்றுவரும் தீவிர சண்டையில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏமனில் இருந்து தங்களது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கிளர்ச்சி படையினர் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா மீட்கப்பட்டுவிட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சி படையினரின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உதவியுடன் கிளர்ச்சி படையினர் போரிட்டு வருகின்றனர். இதனால் அங்கு போர் தீவிரமடைந்து வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முடியாததால், ஏமனுக்கான ஐநா தூதர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஏமனில் நடைபெறும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ராணுவம் மற்றும் கிளர்ச்சி படையினருக்கு ஐநா பொதுச் செயலாளர் பான்கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இருதரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.