கோலாலம்பூர், ஏப்ரல் 19 – ஒரு மாத தீவிர பயிற்சி, கடும் போட்டி, பல்வேறு சவால்கள் ஆகியவற்றுக்குப் பின் 24 வயதான வானெசா தேவி குமரேஸ், 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ்-மலேசியா அழகியாக முடிசூட்டப்பட்டார்.
சுற்றுலா மேலாண்மை பட்டதாரியான இவர், சிரம்பானைச் சேர்ந்தவர். இந்திய –
சீன பெற்றோருக்கு பிறந்தவரான வானெசா, தான் அழகியாக தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானதும், ஆனந்தக் கண்ணீருடன் அரங்கில் இருந்தவர்களை நோக்கி கையசைத்தார்.
கடந்த ஆண்டு மலேசிய அனைத்துலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சப்ரினா
பென்னட், அவருக்கு முடிசூட்டினார்.
இங்கிலாந்தில் பட்டப்படிப்பை முடித்த வானெசா, பின்னர் அமெரிக்காவில் ஓராண்டு காலம் படிப்பைத் தொடர்ந்தார். இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள தங்கு விடுதியில் அண்மையில் பணியில் சேர்ந்தார்.
நீச்சலில் தேர்ந்தவரான வானெசா, கயிறு கட்டி ஆகாயத்திலிருந்து குதித்தல் ((பங்கி ஜம்பிங்), ஆகாயத்திலிருந்து குதித்தல் (ஸ்கை டைவிங்) உள்ளிட்ட துணிச்சலான சாகசங்களிலும் ஈடுபாடு உள்ளவர்.
“நான் ஒரு சராசரி பெண். புகழும் கவர்ச்சியும் உள்ள இந்த புதிய உலகு எனக்கு பழக்கமானது அல்ல. எனினும் எனக்கு தகுந்த பயிற்சி அளித்து இந்த வாய்ப்பை தந்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி,” என்றார் வானெசா.
மலேசிய அழகிப் பட்டத்துடன் அவருக்கு, 50 ஆயிரம் வெள்ளி பரிசுத் தொகையும், 1
லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய பரிசுகளும் அளிக்கப்பட்டது.
இந்த அழகிப் போட்டியில் பவுலைன் டான் (24 வயது), கெல்லி ஜெகன் (26 வயது), சுகிதா
சந்திரன் (26 வயது) ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனர்.