கோலாலம்பூர், ஏப்ரல் 19 – நேபாள மலைப் பகுதியில் மாயமான மலேசிய மலையேற்ற வீரர் டென்னிஸ் லீ தியான் போவை தேடும் பணி 12ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. ஏப்ரல் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட பிலிப்பைன்ஸ் மலையேற்றக் குழுவினருடன் நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைப் பகுதிக்குச் சென்றார் டென்னிஸ் லீ (படம்).
அந்த மலையில் ஏறத் திட்டமிட்டிருந்த அக்குழுவினர் முதல் நாளின் முடிவிலேயே டென்னிஸ் மாயமானதால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி தொடங்கியது.
நேபாள ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 63 பேர் கொண்ட குழு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
48 வயதான டென்னிஸ் லீயின் குடும்பத்தாரும் தற்போது நேபாளம் சென்று தேடுதல் நடவடிக்கையில் உதவி செய்து வருகின்றனர்.
“தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக நேபாள அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அவர்களால் முடிந்த ஆதரவை நமக்கு அளித்து வருகின்றனர். அதே சமயம் மோசமான வானிலை, அனுபவம் வாய்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அவர்களுக்கு இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனினும் நேபாள அதிகாரிகளிடம் இதே ரீதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். டென்னிஸ் லீயின் குடும்பத்தார் நம்பிக்கையுடன் உள்ளனர். எனினும் அவ்வப்போது விரக்தியாகவும் களைப்பாகவும் குழப்பமாகவும் காணப்படுகின்றனர்,” என்று நேபாளத்தில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரி ஃபட்லி அடிலா தெரிவித்துள்ளார்.