ஏமன், ஏப்ரல் 20 – ஏமனில் இந்திய மீட்புக் குழுவால் மீட்கப்பட்ட மேலும் 475 பேர் கொச்சி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் இரு கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான இந்தியர்கள் ஏமனில் இருந்து மீட்கப்பட்டு நாடு திரும்பினர். மேலும் அங்குள்ள இந்தியர்களை மீட்க கப்பல்களும், போர் விமானங்களும் ஏமனுக்கு அனுப்பட்டன.
இறுதி கட்டமாக 475 பேர் ஏமனிலிருந்து எம்.வி. கவரட்டி மற்றும் எம்.வி. கோரல் என்னும் இரு கப்பல்கள் மூலம் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். இதில் 375 வங்கதேசத்தவர்களும் 65 இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏமன் நாட்டவர்களும் உள்ளனர்.
இதுவே ஏமனில் இருந்து கடல்மார்க்கமாக மீட்கப்படும் கடைசி பணி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட வங்கதேசத்தவர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை மீட்குமாறு 26 நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.