லாலாபாத், ஏப்ரல் 20 – ஆப்கானிஸ்தானில் வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 33 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்தினரும், நேட்டோ படையினரும் ஈடுபட்டனர்.
தலிபான்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு, தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, அங்கிருக்கும் படைகளை படிப்படியாக திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில், பெரும்பாலான அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி விட்டன.
இதையடுத்து, அங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவமும், தீவிரவாத தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில், வங்கி ஒன்றை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
வங்கிக்கு வெளியே மனித வெடிகுண்டு வெடித்து சிதறியதில், அங்கு மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 100 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு தாங்கள் காரணம் அல்ல என்று, தலிபான் இயக்கம் கூறியுள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரப் கானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகரங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். ஜலாலாபாத்தில் நடந்த தாக்குதலில் சிறுவர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இது தீவிரவாதிகளின் கோழைத்தனமான செயல்.” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரத்துக்கு முன்பு பதக்ஷன் மாகாணத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 18 ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில், நேட்டோ படையினரின் ராணுவ ஆபரேஷன்கள் கடந்த டிசம்பருடன் முடிவடைந்து விட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், குறைந்த அளவு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 9,800 வீரர்கள் இந்தாண்டு இறுதி வரைக்கும் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள்.