நகரி, ஏப்ரல் 20 – திருப்பதி மலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாட்டில் அம்மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருப்பதிக்கு போதிய பேருந்துகள் இயங்காததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் சமீப நாட்களாக வெகுவாக குறைந்தது.
வழக்கமாக வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையில் திருப்பதியில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நேற்று கூட்டம் மிக குறைவாக இருந்தது. தர்ம தரிசனம் வரிசையில் நின்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் மூலவரை தரிசித்து திரும்பினர்.
தங்கும் அறைகள் எளிதாக கிடைத்தது. முடி காணிக்கையிலும் கூட்டம் இல்லை. 300 ரூபாய் சிறப்பு தரிசன அனுமதி சீட்டுகள் பெற்றவர்கள் தங்கு தடையின்றி ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
திருப்பதி கோவிலில் ஆண்டு தோறும் 3 நாள் நடைபெறும் பத்மாவதி தாயார் பரினய உற்சவம் (திருக்கல்யாணம்) வருகிற 27–ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் தங்க பல்லாக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி மாட வீதியில் உலா வருகிறார்.
2–வது நாள் தங்க குதிரை வாகனத்திலும் 3–வது நாள் தங்க கருட வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. திருக்கல்யாண மேடை அமைக்கும் பணி நாராயண கிரி உத்யாவனத்தில் நடந்து வருகிறது.