சிங்கப்பூர், ஏப்ரல் 20 – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் தனக்கென பக்கங்களை துவங்கி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் அவர் பதிவு செய்துள்ள தகவல்களை வைத்து ஒரு புத்தகமே தயார் செய்து விடலாம். அந்த அளவிற்கு அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியுள்ளன.
பெரும்பாலான தலைவர்கள் நேரமின்மை காரணமாக, தங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களைப் பராமரிக்க பிரத்தியேகமாக ஆட்களை பணியில் அமர்த்தி இருப்பார்கள்.
ஆனால், லீ சியான் லூங்கின் பதிவுகளில் பெரும்பாலும் அவர் நேரடியாக பதிவு செய்யப்பட்டதாக இருக்கும். அதே வேளையில், தனது செல்பேசி மூலமாக அவரே புகைப்படத்தையும் அழகாக எடுத்திருப்பார்.
இந்நிலையில், இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் லீ சியான் லூங் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் லீ சியான் கூறியிருப்பதாவது:-
“பேஸ்புக், டிவிட்டரில் இது எனது மூன்றாவது வருடம். நீங்கள் என்னுடைய பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.நான் எனது கருத்துகளை பதிவு செய்யும் போதும், உங்களிடமிருந்து அதற்கு பதில் வரும் போதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றேன். குறிப்பாக என்னுடைய #guesswhere, #justforfun டேக்லைன் கொண்ட பதிவுகளில் தங்களது சுய அனுபவங்களையும், பார்க்க வேண்டிய இடங்களை பரிந்துரை செய்தவர்களுக்கும் மற்றும் பல நல்ல திட்டங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி. இங்கே கடந்த வருடத்தின் சிறப்பம்சங்களைக் (வீடியோ) காணலாம். ஆதரவிற்கு நன்றி” இவ்வாறு லீ சியான் குறிப்பிட்டுள்ளார்.
லீ சியான் லூங்கின் கடந்த மூன்று ஆண்டுகள் பேஸ்புக் பதிவுகளை வைத்து ஒரு காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோவுடன் நாசி லெமாக் சாப்பிடுவது, லீ குடும்பத்தின் முன்னாள் கார் ஓட்டுநர் கோ கூன் செங்கை சந்திப்பது போன்ற பல சுவாரஸ்யமான படங்கள் உள்ளன.
அந்த காணொளியை
Lee Hsien Loong என்ற பேஸ்புக் பக்கத்தின் வழியாகக் காணலாம்.
– ஃபீனிக்ஸ்தாசன்