ஓஸ்லோ, மார்ச்.5- அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இந்த ஆண்டு 259 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்படும் வகையில், இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், சிறப்பாக பங்காற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 259 பரிந்துரைகள் வந்துள்ளன’ என நோபல் பரிசு குழுவின் தலைவர் கீர் லுண்டஸ்டாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, 209 தனிநபர் பெயர்களும், 50 நிறுவனங்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
தலிபான்களால் சுடப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பல நாடுகளில் உள்ள சட்டமன்ற எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், நோபல் பரிசு பெற தகுதியானவர்களை பரிந்துரைக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் அறக்கட்டளையின் நிறுவனர் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.இவ்வாறு லுண்டஸ்டாட் கூறினார்.