இஸ்லாமாபாத், ஏப்ரல் 21 – சீன அதிபர் ஜீ ஜின்பிங், அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். 9 ஆண்டுகளுக்கு பின்பு சீன அதிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வதும் இதுவே முதல் முறை ஆகும்.
நேற்று காலை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஜின்பிங் சென்ற விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள நூர்கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
அப்போது அவருக்கும், அவருடைய மனைவி பெங் லி யுவானுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பும், 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
முன்னதாக பாகிஸ்தான் வான்வெளி பகுதிக்குள் ஜின்பிங்கின் விமானம் நுழைந்தபோது சீனாவின் உதவியுடன், பாகிஸ்தான் தயாரித்த ஜே.எப்-17 தண்டர் ஜெட் போர்விமானங்கள் நான்கு ஜின்பிங்கின் விமானத்தை பின்தொடர்ந்து அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தின.
விமானப்படை தளத்தில் ஜின்பிங்கை பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன், பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ரகீல் ஷெரீப், ராணுவ மந்திரி கவாஜா மற்றும் பாகிஸ்தான் அரசின் மந்திரிகள் வரவேற்றனர்.
இதேபோல் சீன, பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடிகளை அசைத்தும், ரோஜா இதழ்களைத் தூவியும் ஜின்பிங்கை குழந்தைகள் வரவேற்றனர். அவர்களுடன் கைகுலுக்கி ஜின்பிங் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் அவர் அங்கிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். ஜின்பிங்குடன் உயர்மட்ட குழு, வர்த்தக பிரமுகர்கள், கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
சீன அதிபரின் வருகையையொட்டி இஸ்லாமாபாத்தின் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காக ராணுவம் குவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஜின்பிங் இஸ்லாமாபத்தில் அதிபர் மம்னூன் ஹூசைனையும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
மம்னூன் ஹூசைன் மதிய விருந்து அளித்தும் உபசரித்தார். இதைத் தொடர்ந்து ஜின்பிங்கும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாடுகளின் நட்புறவு வலுப்படுத்துவது குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலையில் நவாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜின்பிங்கிற்கும், அவருடன் வந்த உயர்மட்டக் குழுவினருக்கும் பிரதமர் இல்லத்தில் சிறப்பு விருந்து அளித்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான் இ-பாகிஸ்தான் விருது ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டது. ஜின்பிங்கின் சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை),
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய், ஷியான் ஆகிய நகரங்களையும், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதி நகரான கவாதாரையும் இணைக்கும் விதமாக பொருளாதார சாலைத்திட்டம், ரெயில், எரிசக்தி குழாய்கள் பதிப்பது,
முதலீட்டு தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்கள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.