Home நாடு சாலைகளில் ‘குறுக்கு சந்திப்புகளையும்’ அகற்றுங்கள் – வேள்பாரி கருத்து

சாலைகளில் ‘குறுக்கு சந்திப்புகளையும்’ அகற்றுங்கள் – வேள்பாரி கருத்து

596
0
SHARE
Ad

Vell Paariகோலாலம்பூர், ஏப்ரல் 21 – தாமான் மேடானில் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மஇகா வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலுவை இருப்பது இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்குமானால், சாலைகளில் குறுக்கு சந்திப்புகளையும் (Cross junctions) வளைவுகளாக (roundabouts) பொதுபணித்துறை மாற்ற வேண்டிய நிலை வரும் என்றும் வேள்பாரி கூறியுள்ளார்.

அதே போல், பள்ளிகளில் தங்களது குழந்தைகளுக்கு என்றுமே ‘+’ கூட்டல் குறியீட்டைக் கற்றுத் தரக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவர்களின் குழந்தைகளுக்கு கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமே கற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், கூட்டலுக்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு மாற்றுக் குறியீடு ஒன்றை தான் தேட வேண்டும். அதே போல், ஆங்கிலத்தில் ‘t’ -க்கு பதிலாக அவர்கள் குழந்தைகளுக்கு ‘T’ தான் கற்றுக் கொடுக்க வேண்டும். காரணம் ‘t’ சிலுவை குறியீட்டை நினைவு படுத்தும்” என்று வேள்பாரி மலேசியாகினிக்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறுகிய மனப்பான்மை

எல்லா முஸ்லிம்களையும் தான் சாடவில்லை என்று கூறியுள்ள வேள்பாரி, தான் குறிப்பிடுவது குறுகிய மனப்பான்மை கொண்டவர்களை மட்டுமே என்று விளக்கமளித்துள்ளார்.

“மற்ற மதங்களின் சின்னங்கள் இருப்பதால் தங்களது புனிதம் கெட்டுவிடும் என்று எல்லா முஸ்லிம்களும் நினைப்பதில்லை என நம்புகின்றேன். தமிழில் ஒரு பழமொழி உண்டு. பயப்படுபவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் பேயாகத் தெரியும் என்பார்கள். இப்படி தான் சிலரின் மனப்போக்கு உள்ளது ” என்றும் வேள்பாரி கூறியுள்ளார்.

ஐஜிபி சொல்வது தவறு

Crossremoved

மலேசியாவில் எல்லா மதங்களையும், இனங்களையும் ஏற்றுக் கொண்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று கூறப்படுவதற்கு நேர்மாறாக இந்த சிலுவை அகற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளது என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது காரணம் அவர்கள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளைத் தொடவில்லை என்று ஐஜிபி (தேசிய காவல் படைத் தலைவர்) காலிட் அபு பக்கர் கூறுகின்றார். ஆனால் சிலுவை என்பது கிறித்தவர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அது கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் தொடர்புடையது இல்லை என்ற பட்சத்தில் எதற்காக அதை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும்?” என்றும் வேள்பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை மிக கவனமாக செயல்பட்டு இரு தரப்பிலும் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது எந்த ஒரு அச்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.